Popular Posts

Thursday, 7 November 2019

வீட்டுதெய்வ வழிபாடு. முன்னோட்டம்




கார்காத்தார் சமூகத்தைச் சார்ந்த குடும்பங்களில் குலதெய்வ வழிபாடு மட்டுமல்லாமல் அவர்களுக்கே தனித்துவமான வீட்டு தெய்வ வழிபாடு என்றதொரு பிரத்யேக வழிபாடு ஒன்று உண்டு.பண்டைய காலங்களில் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டு குடும்பங்களாகவே வாழ்ந்துவந்தனர்.தவிர்க்க முடியாத பலவித காரணங்கள் மற்றும் காலத்தின் கட்டாயத்தினால் கூட்டுக்குடும்பங்கள் பலவும் தனிக்குடும்பங்களாய் பிரிந்து வாழத்தொடங்கினர்.இருப்பினும் முக்கிய நிகழ்வுகளை ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
     ஒவ்வொரு வீட்டிலும் முன்னோர்களை நினைவு கூறும் விதமாக ஒன்று கூடி வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ள செயலாகும்.
      முக்கியமாக மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து வழிபாடு நடத்தும் கொண்டாட்டமாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஓர் பானையில் முன்னர் வழிபாட்டில் வைத்து வணங்கப்பட்ட சேலைகள் வைக்கப்பட்டு மடக்கினால்மூடப்பட்டிருக்கும். அதற்கு்மேல் மண்சட்டி ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும்.இப்பானை வைக்கப்பட்டிருக்கும் அறை அல்லது அலமாரி மிகவும் அதிகமான அளவில் தூய்மை யாக வைத்திருப்பர்.தினமும் அல்லது செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் விளக்கேற்றி வழிபடுவர் முக்கிய பண்டிகை காலங்களில் படையலிட்டும் வழிபாடு நடத்துவர்.
     நமது வீட்டில் எனது (பாலு) திருமணத்தின் பொழுது(1977) வழிபாடு நடத்தப்பட்டு நமது பூர்விக கிராமமான திருக்குருகாவூரிலிருந்து நமது பெரியப்பா திரு.குழந்தைவேல் பிள்ளையின் மகன் திரு .முத்தையா பிள்ளை இல்லத்திலிருந்து பிரித்து சிதம்பரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    பின்னர் நமது வீட்டில் நடை பெற்ற ஆண்மக்களின்திருமணங்களின் பொழுது வீட்டு தெய்வ வழிபாடு நடத்தப்பட்டது. சிதம்பரம் 125,கடைத்தெரு வீட்டிலிருந்து மாரியப்பாநகர் அண்ணன் நடராசன் இல்லத்திற்கு குடி புகுந்தபோது அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் வழிபாடு நடத்தப்பட்டது.
    அண்ணன் நடராசன் அவர்கள் மாரியப்பா நகர் வீட்டிலிருந்து சிதம்பரம் நகருக்கு குடி பெயர்ந்த பொழுது (2008) எனது மகன் பா.கௌதமன் திருமணத்தை முன்னிட்டு வழிபாடு நடத்தி முடித்த பின்னர் அண்ணன் சண்முகநாதன் இல்லத்தில் தெய்வத்து பானை பிரதிஷ்டை செய்து வழிபாடு தொடரப்பட்டது. 
    எல்லோருடைய வயது முதிர்ச்சியின் காரணமாக ஒருமித்த கருத்தாக வழிபாடு நடத்தி தெய்வப்பானையில் உள்ள புடவைகளை மூன்றாக பங்கிட்டு அவரவர் இல்லங்களுக்கு கொண்டு சென்று வழிபாட்டினை தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.
     பிரபாகரனின் மகள் செல்வி.பிரகதியின் திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு 3.11.19 அன்று வீட்டு தெய்வ வழிபாடு நடத்தி புடவைகளை பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. வழிபாட்டினை நடத்தும் முறையினை அடுத்த தொகுப்பில் காண்போம்.


1 comment:

  1. சிறப்பான பதிவு. பிரேமா

    ReplyDelete